சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை எச்சரிக்கை..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-02 06:54 IST

சென்னை,

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:-

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.

சென்னையில்..

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்