மிக கனமழை எச்சரிக்கை.. மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா..?

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-03 12:57 IST

சென்னை,

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்னதாகவே இது காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை கொடுக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வட மாவட்டங்களில் இந்த புயல் பெரிய ஏமாற்றத்தை கடந்த மாதம் 30-ந் தேதி கொடுத்தது. அதிகனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டு, வறண்ட காற்றின் ஊடுருவலால் அன்றைய தினம் மழை பொய்த்து போனது. இதன்படி டிட்வா புயல் செயலற்ற நிலையில் சென்னைக்கு அருகே வலுவிழக்க தொடங்கியது. இதனையடுத்து டெல்டா, தென் மாவட்டங்களில் பெய்த மழைகூட வட மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்யவில்லையே என பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் வலுவிழந்து சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டிட்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் இருந்து தன்னுடைய மழை ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது. சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்தது.

இப்படியாக வட மாவட்டங்களிலும் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 மணி நேரத்துக்கும் மேலாக நிலைகொண்டு, மழையை கொட்டியது. இதனால் சென்னையிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன.

நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவிய நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து வட தமிழகத்தில் நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி

ஆரஞ்ச் அலர்ட்

சென்னை,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு,

ராணிப்பேட்டை,

திருவள்ளூர்,

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள்

 

மேலும் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 நாளை (04-12-2025) கனமழை எச்சரிக்கை


திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா..?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

நேற்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்