சென்றது சென்யார்.. சென்னையை நோக்கி நகரும் புதிய புயல்.!
29-ந்தேதி முதல் வட தமிழகத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.;
சென்னை,
புதிய புயல்
மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.
இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
சென்னைக்கு நோக்கி நகர்ந்து...
இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
வட தமிழக மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.