அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் - வானிலை மையம்
சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.;
சென்னை,
இலங்கையையொட்டி வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்ட்டு விட்டு தமிழகம் நோக்கி நகர்ந்தது. இலங்கையில் நிலச்சரிவு,பெருவெள்ளம் என கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி 390 பேரின் உயிரையும் டிட்வா புயல் பறித்தது.
இதன்பிறகு டெல்டா மாவட்டங்களில் மையம் கொண்ட புயல் தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 2 லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
கனமழைக்கு 6 பேர் பலியான நிலையில் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்தன. இப்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கிய டிட்வா புயல் சென்னையை நோக்கி நேற்று முன் தினம் நகர்ந்தது. அப்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து காணப்பட்டது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் சென்னையையொட்டிய கடலோர பகுதிகளிலேயே காணாமல் போய்விடும் என வானிலை ஆய்வாளர்கள் அறீவித்திருந்தனர். இருப்பினும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தினிந்த கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் சென்னையில் நேற்று காலையில் இருந்தே அதி கனமழை தொடர்ச்சியாக விட்டு விட்டு பெய்து வருகிறது.
காலையில் தொடங்கிய மழை பல இடங்களில் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை உள்ப்ட 4 மாவட்டங்களிலும் எதிர்பாராத கனமழை கொடுத்த நிலையில் இன்று காலையில் அது தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் இன்று 2-வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும். கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் என
இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.