இங்கிலாந்தில் ஓடும் ரெயிலில் கத்திக்குத்து - 10 பேர் படுகாயம்

கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-11-02 14:37 IST

லண்டன்,

இங்கிலாந்தின் டன்காஸ்டர் பகுதியில் இருந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் ரெயில் நிலையம் நோக்கி நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடத்தில் பெரும்பாலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த வகையில், நேற்று இரவு வழக்கம்போல் அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் உள்ள ஹண்டிங்டன் நகரம் அருகே ரெயில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பயணிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஓடும் ரெயிலில் நடந்த இந்த திடீர் தாக்குதலால் செய்வதறியாது திகைத்த சக பயணிகள், அலறி கூச்சலிட்டபடி ரெயிலுக்குள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கினர்.

இந்த குழப்பத்திற்கு நடுவே சிலர் தடுமாறி கீழே விழுந்தபோதும், அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் தங்கள் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக ஓடியதாகவும், சிலர் கழிவறைகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கத்தியால் குத்தப்பட்டவர்கள் படுகாயங்களுடன் ரெயில் பெட்டிக்குள் விழுந்து கிடைந்தனர். ஒரு சில நிமிடங்களில் அந்த ரெயில் பெட்டி முழுவதும் ரத்தக்களறியாக மாறியாது.

இதனிடையே ரெயிலில் இருந்த பயணிகள் சிலர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவலர்கள் அடுத்த ரெயில் நிறுத்தத்திற்கு விரைந்து வந்தனர். இதன்படி அந்த ரெயில் அடுத்த நிறுத்தத்திற்கு வந்தபோது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2-வது நபரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்