365 நாட்களில் 365 வெற்றிகள்: ஒரு ஆண்டு ஆட்சி காலத்தில் பல சாதனைகள் - டிரம்ப் பேட்டி
ஒவ்வொரு போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். என்று டிரம்ப் கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி 2-வது முறையாக பதவி யேற்றார். இந்த நிலையில் டிரம்பின் 2-வது ஆட்சி காலத்தில் ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை யொட்டி அவர் செய்த சாதனைகளை 365 நாட்களில் 365 வெற்றிகள் என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிட்டது. மேலும் டிரம்ப் நிருபர்கள டன் சுமார் 2 மணி நேரம் பேட்டி அளித்தார். அப்போது தனது ஒரு ஆண்டு ஆட்சியின் சாதனைகள், வெற்றிகளை கூறினார்.
அவர் கூறியதாவது:-
நான் 8 போர்களை தடுத்து நிறுத்தினேன். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரில் ஈடுபட இருந்தன. அணு ஆயுதங்களைக் கொண்ட அந்த 2 நாடுகளும் ஒரு பெரிய மோதலின் விளிம்பில் இருந்தன. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த போரை தடுத்து நிறுத்தினேன். பாகிஸ்தான் பிரதமர் நான் 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக கூறினார். இது எனது வெற்றிகளில் முக்கியமானது.
ஒவ்வொரு போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. நான் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி உள்ளேன். நோபல் பரிசு குறித்த முடிவுகள் அரசியல் ரீதியாகப் பார்க்கப் படுகின்றன. நோபல் பரிசை நார்வே கட்டுப்படுத்துகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ அதை என்னிடம் வழங்கினார். அதை நான் மதிக்கிறேன். நாங்கள் காசா அமைதி வாரியத்தை உருவாக்கி உள்ளோம். இது அற்புதமாக செயல் படும் என்று நம்புகிறேன். நான் தீர்த்து வைத்த 8 போர்களிலும் ஐ.நா.சபை ஒன்றில் கூட எனக்கு உதவ வில்லை என்றார்.
டிரம்ப் தனது பேட்டியில்,
ஒரு ஆண்டு ஆட்சிகாலத்தில் பல சாதனைகள் படைக்கப்பட்டதாக தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தது, வெனிசுலா அதிபரை சிறைப்பிடித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
மேலும் நாம் ஒரு குழப்பமான சூழ்நிலையை எதிர் கொண்டு அதை சமாளித்து மிகவும் சிறப்பாக மாற்றி உள்ளோம். இது இன்னும் சிறப்பாகப் போகிறது என்றார். டிரம்ப் தனது ஒரு ஆண்டு ஆட்சிகாலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பல நாடுகள் மீது வரி விதிப்பு, விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல் இஸ்ரேல்- காசா போரை நிறுத்தியது, ஈரானின் அணு நிலையங்கள் மீது தாக்குதல் என தனது நடவடிக்கைகள் மூலம் உலகை தன் பக்கம் பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்.