வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.;
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் புரட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது32) படுகொலையால் ஏற்பட்ட பதற்றம் மறைவதற்குள், வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் நேற்று சுடப்பட்டு உள்ளார். தேசிய குடிமக்கள் கட்சி என்ற கட்சியின் குல்னா பிரிவு தலைவரான மொதாலேப் ஷிக்தர் தென்மேற்கு குல்னா நகரில் மர்மநபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் குல்னா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தலையில் இருந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் அபாய கட்டத்திலேயே இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷிக்தரை சுட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.