வங்காளதேச முன்னாள் பிரதமர்: அமெரிக்க நகர தெருவுக்கு கலிதா ஜியா பெயர்
ஹாம்ட்ராம்க் நகரம் அமெரிக்காவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முதல் நகரமாக உள்ளது.;
மிக்சிகன்,
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார். இவர் வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள ஜோசப் காம்பாவ் மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு இடையிலான சாலையின் ஒரு பகுதிக்கு கலிதா ஜியாவின் பெயரைச்சூட்டும் திட்டம் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த நகர சபை கவுன்சிலில் தற்போது வங்காளதேச வம்சா வளியைச் சேர்ந்த 4 பேர் உள்ளனர். அவர்களின் தீவிர முயற்சியால் அந்த தெருவுக்கு கலிதா ஜியா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹாம்ட்ராம்க் நகரம் அமெரிக்காவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முதல் நகரமாக உள்ளது. கடந்த 2013-ஆண்டு முஸ்லிம் பெரும் பான்மை நகரமாக மாறிய இந்நகரம் 2022-ஆண்டு அனைத்து முஸ்லிம்களையும் கொண்ட நகர சபையைக் கொண்ட முதல் அமெரிக்க நகரம் ஆனது. இந்த நகரத்தின் மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளி நாட்டில் பிறந்தவர்கள். மேயர் மற்றும் முழு நகர சபை உட்பட அதன் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.
இதேபோல் ஏற்கனவே, சிகாகோவில் ஒரு சாலைக்கு மறைந்த வங்க தேச ஜனாதிபதியும் கலிதா வின் கணவருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயர் சூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.