நாம் உலகின் சிதைவுக்கு எதிராகப் போராட வேண்டும் - பிரான்ஸ் அதிபர் மெக்ரான்
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கூறினார்.;
பாரிஸ்,
இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை மந்திரி ஜீன் - நோயல் பரோட்டை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை எஸ்.ஜெய் சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இந்தியா-பிரான்ஸ் இடையேயான நல்லுறவு குறித்து விவாதித்தனர். இதுதொடர்பாக எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து, பிரதமர் மோடியின் நல்வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்தேன்.சமகால உலக நிகழ்வுகள் குறித்த அவரது பார்வை களையும், நமது கூட்டாண்மை மீதான நேர்மறையான உணர்களையும் நான் ஆழமாக பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
பாரிசில் நடந்த பிரான்சின் தூதர்கள் மாநாட்டில் இம்மானுவேல் மெக்ரான் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர் இதில் மெக்ரான் பேசியதாவது:-
நாம் உலகின் சிதைவுக்கு எதிராகப் போராட வேண்டும். ஜி-7 அமைப்பு என்பது சீனாவுக்கு எதிரான ஒரு குழுவாகவோ அல்லது பிரிக்ஸ் அமைப்புக்கு எதிரான குழுவாகவோ இருக்கக்கூடாது. பிரிக்ஸ் ஒரு போதும் ஜி-7-க்கு எதிரான குழுவாக இருக்க முடியாது. இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இருப்பதால், அது மற்ற நாடுகளுக்கு ஒரு உறவு பாலங்களை உருவாக்க முடியும். ஜி7-பிரிக்ஸ் இணைந்து இணைந்து பணியாற்றுவது அவசியம். முக்கிய துறைகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா கூட்டாளிகளாக உள்ளனர். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
அடுத்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். அங்கு டெல்லியில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன் என்றார்.
எஸ்.ஜெய்சங்கர் பேசும் போது,
ஐரோப்பாவில் பிரான்ஸ்தான் எங்கள் முதல் மூலோபாய கூட்டாளி . எங்களின் தரம் மிகவும் சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அதிபர் மெக்ரானை விரைவில் இந்தியாவில் வரவேற்க ஆர்வமாக உள்ளோம் என்றார்.