அமைதியே சிறந்த மருந்து... உலகளாவிய ராணுவ செலவு ரூ.243 லட்சம் கோடி; டெட்ரோஸ் அதானம் வருத்தம்
உண்மையில், உலகில் மதிப்புமிக்க பொருட்களுக்கான விலையை யாரோ சிலர் மாற்றி நிர்ணயித்து விட்டனர் என்றே தோன்றுகிறது என அவர் வேதனை தெரிவித்து உள்ளார்;
ஜெனீவா,
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட செய்தியில், 2024-ம் ஆண்டு உலக அளவில் ராணுவத்திற்காக செலவிடப்பட்ட தொகை சாதனை அளவாக 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.243 லட்சம் கோடி) உள்ளது.
எனினும், உலகளாவிய சுகாதார திட்டங்களுக்கு செலவிடுதல் பெரிய அளவில் சரிவடைந்து உள்ளது. இந்த உலகத்திற்கு உயிர்களை பாதுகாப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதே தற்போது தேவையாக உள்ளது. போர்களை தீவிரப்படுத்துவதில் அல்ல. அமைதியே சிறந்த மருந்து என தெரிவித்து உள்ளார்.
அவர் தொடர்ந்து, 150 நாடுகளில் பரந்து விரிந்து செயலாற்றி வரும் எங்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு 420 கோடி அமெரிக்க டாலர் அல்லது ஆண்டுக்கு 210 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் உறுப்பு நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன. இது மிக பெரிய தொகை அல்ல என நான் நினைக்கறேன்.
ஏனெனில் ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கு உலகளவில் ராணுவ செலவினத்திற்கு இந்தளவு தொகையானது செலவிடப்படுகிறது. இந்த தொகை, அதிநவீன விமானங்களில் ஒன்றான ஸ்டீல் பாம்பர் வகை விமானத்தின் விலைக்கு இணையானது. ஒவ்வோர் ஆண்டும் புகையிலை நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக செலவிடும் தொகையில் 4-ல் ஒரு பங்கு இந்த தொகை ஆகும் என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்.
உண்மையில், உலகில் மதிப்புமிக்க பொருட்களுக்கான விலையை யாரோ சிலர் மாற்றி நிர்ணயித்து விட்டனர் என்றே தோன்றுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்து உள்ளார்