விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி.

விசுவாசத்துடன் இருந்தது தவிர உங்களுக்கு எதிராக வேறெதுவும் செய்யாத கூட்டணி நாடுகளை நீங்கள் மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது என ஜர்லோவ் கூறினார்.;

Update:2026-01-10 07:08 IST

கோபன்ஹேகன்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.

வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. வெனிசுலாவில் அத்துமீறி அமெரிக்கா நடந்து கொண்டதற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.

ரஷியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன.

கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் எடுத்து கொள்ளப்படும் என டிரம்ப் பேசி வருவதும் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் டென்மார்க்கில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. ராஸ்மஸ் ஜர்லோவ் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கா எங்கள் மீது ராணுவ வீரர்களை கொண்டு மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஆழ்ந்த வேதனை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்தது தவிர உங்களுக்கு எதிராக வேறெதுவும் செய்யாத நாடுகளை, கூட்டணி நாடுகளை நீங்கள் மிரட்டுவீர்கள் என்பது அதிர்ச்சி தருகிறது. நினைத்து பார்க்க முடியாதது என அமெரிக்காவின் அச்சுறுத்தலை குறிப்பிட்டு கூறினார்.

இது பிற நாடுகளுக்கும் கூட வருத்தம் ஏற்படுத்தும். ஏனெனில், டென்மார்க் மீது இதுபோன்று படைகள் கொண்டு மிரட்டல் விடப்படும் என்றால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது என கூறினார்.

இதேபோன்று கிரீன்லாந்து பற்றி குறிப்பிட்ட அவர் அந்நாட்டுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. ஒரே அச்சுறுத்தல் அமெரிக்காதான். சீனா மிரட்டி வருகிறது என்பது எல்லாம் பொய்யான புனைவுகள். சீனாவின் தூதரகமோ, சுரங்க பணிகளோ, ராணுவ வீரர்களோ கிரீன்லாந்தில் இல்லை என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்