ப்ளாஷ்பேக் 2025: உலக பிரபலங்கள், தலைவர்களின் அதிரடி செயல்களும், எதிர்வினைகளும்
உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்களின் அதிரடி பேச்சுகள், அவர்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் எதிர்வினைகளை பற்றிய தொகுப்பினை காணலாம்.;
ஜனவரி 15, 2025
இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42).
வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகளான சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
ஜனவரி 22, 2025
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் போர் பற்றி கூறும்போது, நாங்கள் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறோம். புதினிடமும் விரைவில் பேச உள்ளோம் என்றார்.
ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டால், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று மிரட்டலாக கூறினார்.
ஜனவரி 30, 2025
தென்ஆப்பிரிக்காவில் 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜுமா. இவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு அழுத்தம் தரப்பட்டது.
2021-ம் ஆண்டு ஊழல் விசாரணைக்கு ஆஜராகும்படி ஜேக்கப்புக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்ததும், கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால், அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அப்போது, ஜேக்கப்பின் மகள் டுடுஜைல் ஜுமா-சம்புத்லா டுவிட்டரில் (தற்போது எக்ஸ் வலைதளம்) வன்முறையாளர்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் பரவிய வன்முறையின்போது, அதனை ஊக்குவிக்கும் வகையில், இன்னும் கூடுதலாக சேதம் ஏற்படுத்தும்படி, போராட்டக்காரர்களை சம்புத்லா தூண்டி விட்டார் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகளான சம்புத்லா, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் போலீசிடம் தானாகவே சென்று தன்னை ஒப்படைத்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.
பிப்ரவரி 7, 2025
சுவீடன் நாட்டின் அரசராக இருப்பவர் கார்ல் கஸ்டாப். இவருடைய மகனான கார்ல் பிலிப், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சோபியா ஹெல்க்விஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அலெக்சாண்டர், கேப்ரியல் மற்றும் ஜூலியன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சோபியா கர்ப்பிணியானார். இதனால், அவர்களுடைய குடும்பம் 4-வது குழந்தையை எதிர்பார்த்து இருந்தது. இந்த சூழலில், சுவீடனின் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்து உள்ளது.
பிப்ரவரி 13, 2025
அமெரிக்காவின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், முறைப்படி அவர் பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்டுக்கு, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி சார்பில் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பிப்ரவரி 19, 2025
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதற்காக அவர் சில சதித்திட்டங்களை தீட்டியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்படி, தற்போது அதிபராக பதவி வகித்து வரும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு விஷம் கொடுக்கவும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் என்பவரை கொல்லவும் சதித்திட்டம் தீட்டினார் என குற்றச்சாட்டு எழுந்தது.
மார்ச் 31, 2025
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, உக்ரைன் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக முதலில், ரஷியாவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு டிரம்ப் அரசு வரி விதிப்பை அமல்படுத்தியது.
போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என புதினிடம், டிரம்ப் கேட்டு கொண்டார். ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகைக்கு நேரில் அழைத்து பேசினார். இந்த சூழலில், போரானது முடிவுக்கு வருவதற்கு பதிலாக தீவிரமடைந்தது.
இதுபற்றி என்.பி.சி. நியூஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில், நான் அதிக கோபத்தில் இருக்கிறேன். நீண்டகாலம் ஆகியும் நீங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இல்லையா? என ரஷியாவை குறிப்பிட்டு கூறினார்.
உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ரஷியா மற்றும் என்னால் முடியவில்லை என்றால், அது ரஷியாவின் தவறு என்றே நினைக்கிறேன். அப்படி இருக்க கூடாது. ஆனால், அது ரஷியாவின் தவறு என நான் கருதினால், ரஷியாவில் இருந்து வெளிவரும் அனைத்து எண்ணெய்களின் மீது 2-வது முறையாக வரிகளை விதிக்க போகிறேன் என மிரட்டும் வகையில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 1, 2025
டிரம்ப் ஜனாதிபதியான பின்பு சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. டிரம்பின் வெளிநாட்டு பயணம் மே மாதத்தில் இருக்கும் என கிடைத்த தகவலை பற்றி, நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், அடுத்த மாதம் இருக்கலாம். அதற்கு முன்பே கூட இருக்க கூடும் என்று கூறினார்.
2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும். எனினும், சவுதி அரேபியாவை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அவருடைய முதல் பதவி காலத்தின்போது, அமெரிக்காவில் 45,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
இந்த முறை அமெரிக்க நிறுவனங்களில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்து உள்ளது. இதனால், அந்நாட்டுக்கு அவருடைய முதல் பயணம் அமைகிறது.
டிரம்ப் இதுபற்றி கூறும்போது, பொதுவாக தலைவரான பின்னர், நீங்கள் இங்கிலாந்துக்கு முதலில் போக கூடும். கடந்த முறை, நான் ஜனாதிபதியானபோது, சவுதி அரேபியா 45,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்தது. 2-வது முறை பதவியேற்ற பின்னர், இந்த மதிப்பானது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இரட்டிப்படைந்து உள்ளது என்றார்.
ஏப்ரல் 7, 2025
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலான நாட்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுபற்றி மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ள தகவலின்படி, இங்கிலாந்தின் லண்டன் நகரில் 9-ந்தேதி (நாளை மறுநாள்), இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதிக்கான மந்திரிகள் மட்டத்திலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற முடிவாகி உள்ளது.
சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். அதனுடன் அந்த நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துகிறார். மந்திரிகள் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில், பணியாளர் குழுக்கள் மட்டத்தில் வெளிப்படையாக சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடு என இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு தளம் என்ற அளவில் இந்த 13-வது சுற்று பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
இதுதவிர, முதலீட்டு விவகாரங்கள், நிதி சேவைகள், நிதிசார் ஒழுங்குமுறைகள், யு.பி.ஐ. இணைப்புகள், வரிவிதிப்பு விவகாரங்கள் மற்றும் சட்டவிரோத பண புழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களிலான நிதிசார்ந்த ஒத்துழைப்பில் ஒழுங்குமுறை அமைப்புகளுடனும் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
இதனுடன், முக்கிய அதிகாரிகள், முதலீட்டுக்கான வட்டமேஜை சந்திப்புகள் மற்றும் முக்கிய நிதி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுடனும் பிற கூட்டங்களை அவர் நடத்துகிறார். ஆஸ்திரிய பயணத்தில், அந்நாட்டின் நிதி மந்திரி மார்கஸ் மார்டர்பாயர் உள்ளிட்ட மூத்த அரசு தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 14, 2025
79 வயது டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பணியாற்ற தகுதி வாய்ந்தவரா? என்பது பற்றிய டாக்டரின் அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.
சமீபத்தில் டிரம்புக்கு உடல்தகுதிக்கான பரிசோதனை நடைபெற்றது. இதுபற்றி வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் டிரம்பின் உடல்தகுதியை ஆய்வு செய்த டாக்டரான சீன் பார்பபெல்லா வெளியிட்ட செய்தியில், தலைமை தளபதியாக மற்றும் நாட்டின் தலைவராக பணிகளை மேற்கொள்வதற்கு முழு அளவில் தகுதி வாய்ந்தவராக ஜனாதிபதி டிரம்ப் உள்ளார்.
டிரம்பின் வாழ்க்கை முறையே அவருடைய உடல்நலனுக்கான ஒரு பெரிய காரணியாக பங்காற்றுகிறது என குறிப்பிட்ட டாக்டர், அது தொடர்ந்து டிரம்பின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
டிரம்புக்கு, 2020-ம் ஆண்டில் இருந்த எடையை விட 20 பவுண்டுகள் வரை எடை குறைந்துள்ளது. அவர் இருதய, நரம்பு மற்றும் பொதுவான உடல் இயக்கம் என்ற அளவில் தொடர்ந்து சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மே 2, 2025
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரை நகரை சேர்ந்தவரான இவருடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக கூகுளின் தலைமை நிறுவனம் என கூறப்படும் ஆல்பபெட் நிறுவனம், செலவு செய்த தொகையை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்திடம் இந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றின்படி, கடந்த 2024-ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு 8.27 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய ரூ.67.8 கோடி) செலவிடப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இது, அதற்கு முந்தின ஆண்டின் செலவை விட 22 சதவீதம் அதிகம் ஆகும். முந்தின ஆண்டில் 6.78 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.57.48 கோடி) செலவிடப்பட்டது.
சுந்தர் பிச்சையின் இல்லத்திற்கான பாதுகாப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள், கண்காணிப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் விரிவான பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு இந்த தொகை செலவிடப்பட்டு உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கைகள் சி.இ.ஓ.வுக்கான ஒரு தனிப்பட்ட பலனாக கருத்தில் கொள்ளப்படாது என விளக்கமளித்த ஆல்பபெட், ஆனால் அவருடைய தொழில்முறை பொறுப்பை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக கூகுளை வழிநடத்தி செல்லும் அவர் பல வகையில் பணப்பலன்களை பெற்று வருகிறார்.
மே 21, 2025
அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. இதுதவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குடியரசு கட்சி உறுப்பினரான அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதி ரொனால்டு ரீகன் இதனை அமைக்க விரும்பினார் என்றார்.
வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு கவசம் ஒன்றை கட்டமைப்பது என அமெரிக்க மக்களுக்கு, தேர்தல் பிரசாரத்தின்போது நானும் வாக்குறுதி அளித்திருந்தேன் என மீண்டும் கூறினார்.
இதன்படி, ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 833 கோடி (175 பில்லியன் அமெரிக்க டாலர்) திட்ட மதிப்பில் இந்த கோல்டன் டோம் கட்டப்பட உள்ளது என கூறினார். அதற்கான திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணை தலைவர் மைக்கேல் கட்லெயின் மேற்பார்வை செய்வார்.
இந்த டோம் முழு அளவில் கட்டி முடிக்கப்பட்டதும், உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதனை இடைமறித்து தாக்கும் திறன் பெற்றிருக்கும். விண்வெளியில் இருந்து தாக்கினாலும் கூட அது முறியடிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
மே 22, 2025
தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடனான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். எனினும் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறி வருகிறார்.
ஆனால், இதனை ராமபோசா மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
ராமபோசா உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார். அப்போது, ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் வெளிவந்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை சான்றாக கையில் வைத்திருந்த டிரம்ப் அவற்றை பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டு பேசினார்.
எனினும் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை ராமபோசா மறுத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் அனைத்து இன மக்களும் குற்ற செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என பதிலாக தெரிவித்து உள்ளார். ராமபோசா அரசு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் சூழலில், மீண்டும் இதனை கூறினால், டிரம்ப் அவர் கூறியதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என்று ராமபோசா அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மே 26, 2025
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் ஹெலிகாப்டரை தாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவில் இருந்து வெளிவரும் ஆர்.பி.சி. என்ற செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில், ரஷிய வான் பாதுகாப்பு மண்டல தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது, புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன், டிரோன் தாக்குதலுக்கு எதிராக ரஷிய படைகள் செயல்பட்டன என கூறினார்.
நாங்கள் உடனடியாக வான் பாதுகாப்புக்கான போரில் ஈடுபட்டோம். தொடர்ந்து போரிட்டு அதனை முறியடித்து வெற்றி பெற்றோம். புதினின் பயணத்திற்கான வான்வெளி பாதுகாப்பையும் உறுதி செய்தோம் என்றார். டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த ஹெலிகாப்டர் திறம்பட செயல்பட்டது என்றார்.
கடந்த ஜனவரியில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு, புதினை கொலை செய்ய முயற்சித்தது என்ற தகவல் வெளியானது.
இதனை அப்போது பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளராக இருந்த டக்கர் கார்ல்சன் கூறினார். ஆனால், அதற்கான சான்று எதனையும் அவர் வெளியிடவில்லை. எனினும், ரஷியாவின் அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும்போது, புதின் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டார் என கூறினார். இந்த சூழலில், புதினை கொலை செய்வதற்கான உக்ரைனின் டிரோன் தாக்குதல் முயற்சி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.
ஜூன் 18, 2025
அமெரிக்காவுக்கு வாருங்கள் என டிரம்ப் அழைத்தபோதும், அதனை ஏற்க பிரதமர் மோடி மறுத்து விட்டார் என தகவல் வெளியானது. பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு வலுவாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறினார்.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறும்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.
கனடாவில் இருந்து திரும்பும்போது வழியில் அமெரிக்காவுக்கு வந்து விட்டு செல்லுங்கள் என பிரதமரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார். ஆனால், முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன என கூறி, தன்னால் அமெரிக்காவுக்கு வரமுடியாத சூழலை டிரம்பிடம் பிரதமர் மோடி கூறி விட்டார் என மிஸ்ரி கூறியுள்ளார்.
ஜூன் 26, 2025
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13-ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது என கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். அமெரிக்க விமானங்கள் வெற்றியுடன் தாக்குதலை நடத்தி முடித்து, திரும்பி விட்டன என்றார்.
ஆனால், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது.
இதனால், டிரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். அவர் ட்ரூத் சோசியலில் வெளியிட்ட செய்தியில், இது பொய்யான செய்தி. அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன.
சி.என்.என்.னில் இருந்து நடாஷா பெர்டிராண்டை நீக்க வேண்டும். 3 நாட்களாக பொய்யான செய்திகளை பரப்பும் அவரை நான் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். அவரை உடனடியாக கண்டிக்க வேண்டும். அதன்பின்னர், ஒரு நாயை போன்று தூக்கி எறிய வேண்டும். லேப்டாப்பை திறந்ததும் பொய் செய்தியையே பரப்பும் வேலையில் ஈடுபடுகிறார். அணு உலைகள் பற்றிய பொய்யான புனைவுகளை வெளியிடுகிறார். நம்முடைய பேட்ரியாட் விமானிகள் உண்மையில் சிறந்த பணியை செய்துள்ளனர். முற்றிலும் அழிவுக்கான வேலையை செய்து விட்டனர் என பதிவிட்டு உள்ளார்.
ஜூலை 2, 2025
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூலை 6, 2025
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இன்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.
ஜூலை 6, 2025
அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
ஜூலை 8, 2025
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்தினார்.
இந்நிலையில் தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக அந்தந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று டிரம்ப், அவருடைய சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.
ஜூலை 15, 2025
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜூலை 15, 2025
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைனின் பொருளாதார மந்திரி யூலியா ஸ்வைரைடென்கோவை, புதிய பிரதமராக அறிவித்து ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஜூலை 31, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த கையோடு, பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டார்.
அவர் கூறும்பேது, பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
யாருக்கு தெரியும், ஒரு நாள் அவர்கள் இந்தியாவுக்கு கூட எண்ணெய்யை விற்பனை செய்ய கூடும் என்று கிண்டலாக கூறினார்.
ஆகஸ்டு 6, 2025
இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆகஸ்டு 14, 2025
உக்ரைன் போரை நிறுத்தும் டிரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டுகள் என புதின் கூறினார். அனைத்து தரப்பினரும் நலன் பெறுவதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என ரஷியா தெரிவித்து உள்ளது.
ஆகஸ்டு 21, 2025
வன்முறை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார்.
ஆகஸ்டு 27, 2025
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.
இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரியால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்.
இதனால், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல்சார் உணவு பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொள்ளும்.
ஆனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய மருந்து ஆலைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் (ஆப்பிள் ஐபோன் உள்பட) ஆகியவை இந்த வரிவிதிப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆகஸ்டு 30, 2025
கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஓராண்டு பாதுகாப்பு நீட்டிப்புக்கான சிறப்பு உத்தரவை பைடன் பிறப்பித்து விட்டு சென்றபோதும், டிரம்ப் இதனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.
செப்டம்பர் 1, 2025
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி மற்றும் புதின் இருவரும் இருதரப்பு சந்திப்பில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
செப்டம்பர் 4, 2025
இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் இன்று 14-ம் போப் லியோவை நேரில் சந்தித்து பேசினார். ஹெர்ஜாக் கேட்டு கொண்டதன் பேரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறியுள்ளார்.
செப்டம்பர் 16, 2025
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு தொடுத்து உள்ளார்.
செப்டம்பர் 21, 2025
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சே ஹல்லிகன் என்பவரை டிரம்ப் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
அக்டோபர் 4, 2025
காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் 5-ந்தேதி வரை இறுதி கெடு விதித்து உள்ளார். காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அக்டோபர் 8, 2025
ஆப்கானிஸ்தானின் தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். 2021-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது.
அக்டோபர் 13, 2025
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரை நிர்வாண கோலத்தில் பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் கட்டிப்பிடித்து உல்லாசத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. 7 ஆண்டுகள் அவர்கள் இருவரும் பந்தத்தில் இருந்தனர். 2016-ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு, 2020-ம் ஆண்டு டெய்சி டவ் என்ற மகள் பிறந்துள்ளார். மகளை இருவரும் சேர்ந்து வளர்ப்பது என முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 15, 2025
டிரம்பை புகழும் வகையில் டைம் செய்தி நிறுவனம், அட்டையில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், காசாவில் பிடித்து வைக்கப்பட்ட பணய கைதிகள், டிரம்பின் முதல்கட்ட அமைதி திட்டத்தின் கீழ் விடுதலையானார்கள். அப்போது பாலஸ்தீனிய கைதி ஒருவரும் விடுவிக்கப்பட்டார். டிரம்பின் 2-வது பதவி காலத்தில் மிக பெரிய சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
இதன்படி, மத்திய கிழக்கு பகுதியில், ஒரு மூலோபாய திருப்புமுனையாக காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமையும் என அவருடைய பெருமையை குறிப்பிட்டு உள்ளது. அதற்கு டிரம்பின் வெற்றி என தலைப்பும் இட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 2 ஆயிரம் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் 360 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர். 20 இஸ்ரேலிய பணய கைதிகளும் விடுதலையானார்கள்.
இதனை குறிப்பிட்ட டிரம்ப், என்னை பற்றி டைம் இதழ் நல்ல முறையில் கட்டுரையை வெளியிட்டு உள்ளது. ஆனால், அவர்கள் வெளியிட்ட புகைப்படம், எல்லா காலத்திலும் படுமோசமான ஒன்று. என்னுடைய முடியை அவர்கள் மறைத்து விட்டனர். காற்றில் பறப்பது போன்று சில முடிகள் காணப்படுகின்றன. அது, ஏதோ சிறிய பறக்கும் கிரீடம் போல் உள்ளது.
கீழே இருந்து ஒரு கோணத்தில் எடுக்கும் புகைப்படங்களை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த புகைப்படம் படுமோசம். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இப்படி? என்று ஆவேசத்துடன் பதிவிட்டு உள்ளார்.
எனினும் டைம் செய்தி நிறுவனத்தின் இந்த பதிவுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். 6 ஆயிரத்து 800-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களையும் பதிவிட்டு உள்ளனர்.
நவம்பர் 13, 2025
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார்.
அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.
இதனை கேட்டு ஷரா சிரித்து விட்டார். அப்போது, ஷராவுக்கு சென்ட் அடித்து விட்டு, இது சிறந்த நறுமணம் என டிரம்ப் கூறினார். மற்றொரு பாட்டில் (வாசனை திரவியம் கலந்தது) உங்களுடைய மனைவிக்கு என கூறி விட்டு, உங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர்? என கேட்டார்.
டிரம்ப் கேட்ட கேள்வியால் சிரிப்பலை எழுந்தது. அதற்கு ஷரா, ஒரே ஒரு மனைவிதான் என்றார். அவருடைய தோளில் தட்டி கொடுத்து விட்டு, நண்பர்களே, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என டிரம்ப் கூறினார்.
இதன்பின் பதிலுக்கு டிரம்பிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள்? என ஷரா கேட்டார். அதற்கு டிரம்ப், ஓ, இதுவரை ஒன்றுதான் என கூறி சிரிப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நவம்பர் 16, 2025
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஷியாவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் உதவியுடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என உக்ரைனின் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலாளர் ரஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார்.
இதன்படி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்த இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார். இதன் அடிப்படையில், 1,200 உக்ரைனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
நவம்பர் 29, 2025
பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முதல் அறிவியல், தொழில் நுட்பம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில் ரஷியா மற்றும் இந்தியாவின் சிறப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த நட்புறவு தொடர்பான விசயங்களை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணத்தின்போது இந்தியா-ரஷியா 23-வது வருடாந்திர உச்சி மாநாட்டிலும் புதின் கலந்து கொள்வார்.
இதில் நடப்பு நிலையிலான சர்வதேச மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.
டிசம்பர் 1, 2025
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சாரா பெக்ஸ்டிராம் (வயது 20) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மற்றொருவரான ஆண்ட்ரூ உல்ப் (வயது 24) தீவிர காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த தாக்குதலை நடத்தியவர் ரகுமானுல்லா லக்கன்வால் (வயது 29) என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. டிரம்ப் அரசின் உள்நாட்டு பாதுகாப்புக்கான உயரதிகாரியான கிறிஸ்டி நோயம், வெள்ளை மாளிகையில் நடந்த தாக்குதலில், சாரா கொல்லப்பட்டதற்கு ஜோ பைடன் அரசே பொறுப்பு என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடும், அதில் சாரா பலியானதற்கும் முழு பொறுப்பும் பைடனும், அவருடைய நிர்வாகமுமே காரணம். பைடன் அரசிலேயே இதுபோன்ற தனி நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடங்கியது என கூறியுள்ளார்.
டிசம்பர் 3, 2025
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், ரஷியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, கருங்கடலில் கப்பல்களை உக்ரைன் தாக்குவது என்பது திருட்டுத்தனம் ஆகும். பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும். உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷியா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார்.
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.
டிசம்பர் 10, 2025
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, உக்ரைனின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதுடன், உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல், போரை மன்னிப்புக்கான ஒன்றாக பயன்படுத்தி கொள்கிறார் என கூறினார்.
இதுபற்றி ஜெலன்ஸ்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், தேர்தல் நடைபெற அமெரிக்காவின் உதவி தேவையாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளும் கூட இதற்கு உதவ வர வேண்டும். போர் காலத்தில் பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடத்த நட்பு நாடுகள் உத்தரவாதம் அளிக்க முன் வருகிறார்கள் என்றால் 60 முதல் 90 நாட்களில் தேர்தலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என்று கூறினார்.
உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும். முதலில், பாதுகாப்பு விசயம். ராக்கெட், ஏவுகணை தாக்குதலின்போது, அதனை எப்படி நடத்துவது என்பது. மற்றொன்று எங்களுடைய ராணுவ வீரர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்றார். அதனால், பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டால், உக்ரைனில் தேர்தலை நடத்த தயார் என்று அவர் கூறினார்.
டிசம்பர் 12, 2025
ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் என டிரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்.
டிசம்பர் 17, 2025
உலக தலைவர்களில் முதன்முறையாக, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.
டிசம்பர் 18, 2025
ஓமனில் பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறையில் சுல்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓமன் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே கடல்வழி வர்த்தகம் மற்றும் மக்கள்-மக்களுடனான தொடர்பு என பல நூற்றாண்டுகளாக நட்புறவு உள்ளது.
டிசம்பர் 19, 2025
பிரதமர் மோடி, மஸ்கட் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, சில நாட்களுக்கு முன்பு பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவல் வெளியானது. அதில், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்திற்கு மேல் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகள் சவால்களை சந்தித்தபோதும், இந்தியா தொடர்ந்து விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது என கூறினார்.
பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கூட குறைந்த வளர்ச்சி சதவீதத்துடன் திணறி வருகின்றன. இந்தியா தொடர்ந்து அதிக வளர்ச்சி விகிதத்துடன் உள்ளது. அது நாட்டின் திறனை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 8.2 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவடைந்து இருந்தது. இது, அதற்கு முந்தின காலாண்டில் 7.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.