கடவுளுக்கு எதிராக போர் செய்கிறீர்கள்; போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரானில் இதுபோன்ற கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை உள்பட தீவிர தண்டனைகள் விதிக்கப்படும் என ஆசாத் எச்சரித்து உள்ளார்.;

Update:2026-01-11 07:57 IST

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது.

அவர்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரானுக்கு எதிராக, அந்நிய நாட்டின் ஆதிக்கம் செலுத்த கூடிய, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க கூடிய, நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டறிந்து, தாமதமின்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றும் வழக்கறிஞர்களுக்கு கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு எதிராக செயல்படுவோர், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள், சூறையாடுபவர்கள், ஈரான் தண்டனை சட்டத்தின் கீழ் கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்களாக ஆகிறீர்கள். ஈரானில் இதுபோன்ற கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை உள்பட தீவிர தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்