தென்காசி தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதானதாக புகார் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-30 17:13 GMT

கோப்புப்படம்

தென்காசி,

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி யு. எஸ். பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் அரசியல் கட்சியினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை திடீரென தென்காசி பகுதியில் பலத்த மழையுடன், இடி சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் சில கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தன. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கமல் கிஷோரிடம் புகார் செய்யப்பட்டது. பின்னர் கலெக்டர் கமல் கிஷோர் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய உத்தரவிட்டார்.

இதன் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக சரி செய்யப்பட்டன. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது திடீரென ஏற்பட்ட இடி தாக்குதலால் 73 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. அவை அனைத்தையும் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன என்றார்.

சுமார் 30 நிமிடங்களுக்குப்பிறகு தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் இயங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்