நல்லதை சிந்திப்போம்.. நல்லவர்களையே சந்திப்போம்..!
மனிதர்கள் பிறந்ததில் இருந்து வாழும் வரையில் வீழ்வதும், மீள்வதும், எழுவதும் புதிதல்ல.;
ஆராய்ச்சிகளின் மூலம் பல புதிய அறிவுகளை நாம் பெற்றிருக்கிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் அற்புதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். கல்வியறிவு பெறுவதிலும், உயர் பதவிகளை அலங்கரிப்பதிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் முன்வரிசையில் உள்ளனர். இவையெல்லாம் சமூகம் முன்னேறுவதன் சான்றுகளாக நாம் கருதுகிறோம்.
அதேசமயம், மறுபுறம் விவாகரத்துக்கள் அதிகரிக்கின்றன; குடும்ப உறவுகள் தகர்கின்றன. மன இறுக்கம், பயம், துன்பம், நோய் அதிகரித்து வருகின்றன. பிறர் மீதுள்ள அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் குறைகின்றன. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலுள் தூரம் அதிகரித்து வருகிறது. அறிவு வளர்வதால் சமூகம் வளர்ச்சியடையும் என்றால் இப்படியெல்லாம் நடக்குமா?
சிலர் வாழ்க்கையில் எதிர்பார்ப்புடன் எதையோ தேடிக்கொண்டு இருப்பார்கள். அது ஒரு உறவாக இருக்கலாம், வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கலாம், மகிழ்ச்சி நிறைந்த தருணமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கவனம் அந்த தேடலிலேயே இருப்பதால் அவர்களின் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருக்கும் அந்த நிஜத்தை கவனிக்க முடியாமல் போய்விடுகிறார்கள். அதாவது, அவர்கள் தேடிய அந்த உண்மை, அந்த நம்பிக்கை, அந்த மனிதர்கள் சில சமயம் அவர்களையே தேடி வருகிறார்கள். அதை கவனிக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.
வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் துன்பங்கள் நம்மை புண்படுத்துவதாக நினைக்கக்கூடாது. அவை நம்மை பண்படுத்துவதாகவும் இருக்கலாம். தங்களை புரிந்துகொள்ளும்படி மற்றவர்களை வற்புறுத்துவதன் மூலம் வலுவான உறவுகள் கட்டியெழுப்பப்படுவதில்லை. மாறாக, ஒருபோதும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பதன் மூலமே உறவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன.
உறவு என்பது இயற்கையின் ஒரு அமைதியான பரிசு. பழைய உறவு மேலும் வலிமையானது. அதிக அக்கறை அதிக மரியாதை, குறைந்த வார்த்தைகள், அதிக புரிதல், குறைந்த சந்திப்புகள் மற்றும் அதிக உணர்வுகளைக் கொண்டது. அனைத்திலும் உப்பைப் போல அளவாக இருங்கள். நீங்கள் எப்போதும் கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் இல்லாமை எல்லாவற்றையும் மாற்றிவிடும்.
இந்த சூழல் மனித வாழ்வில் நிந்தரமானது. பிறந்ததில் இருந்து வாழும் வரையில் வீழ்வதும், மீள்வதும், எழுவதும் ஒன்றும் புதிதல்ல. அதுவே நம் இயல்பு என புரிந்தால் வாழ்க்கை இனிமையாகும். சிந்திக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் நல்லதையே சிந்திப்போம்.. சந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் நல்லவர்களையே சந்திப்போம்!