இன்று 21-வது சுனாமி நினைவு தினம்: ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை மறக்க முடியுமா?
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு எழுந்து இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கியது.;
சென்னை,
கடல் அலைகள்... வெள்ளை நிற நுரை ததும்ப பொங்கி எழுந்து, இதமான இரைச்சலுடன் கரை நோக்கி வந்து, மண்ணை முத்தமிட்டு பின்வாங்குவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடல் நீரில் கால் நனைப்பவர்களையும் வாஞ்சையுடன் வருடிக் கொடுத்து மகிழ்விக்கிறது. ஆனால், என்னவோ தெரியவில்லை, "அழகு என்றும் ஆபத்து" என்று சொல்வார்களே, அதுபோல அழகான அலைகளும் ஆக்ரோஷமாக பேரலைகளாக எழுந்து ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.
ஆழிப்பேரலை
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு எழுந்து இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கியது.
அதிகாலை வேளை என்பதால், கடலோரம் வசித்த மீனவ மக்களுக்கும், சுற்றுலா தலங்களில் கடலோரம் நின்ற பயணிகளுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும்.. இங்கும்.. ஓடினார்கள். ஆனால், இரக்கம் இல்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசம் பார்க்காமல் மனித உயிர்களை வாரி சுருட்டிக் கொண்டான்.
2 லட்சம் பேர் மரணம்
இந்த ஆழிப்பேரலை தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்துபோனார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் நிலை என்ன? என்பது இன்று வரை தெரியவில்லை.சுனாமி தாக்குதலின்போது தமிழகத்தில், தலைநகர் சென்னை முதல் குமரி வரை வங்கக் கடலோர பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். இந்த உயிர் பலியையும் தாண்டி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது.
அடங்க மறுக்கும் மரண ஓலம்
சுனாமியின்போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஏராளம். அன்று கடலோரம் எழுந்த மரண ஓலம் 21 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னும் அடங்க மறுக்கிறது. எத்தனையோ பேரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிட்டது. பலரது உள்ளத்தில் அன்று ஏற்பட்ட ஆறாத வடு இன்னும் ரணமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடல் அலைகள் எழுப்பும் ஒலியுடன் காற்றோடு கலந்த சோக கீதமும் இன்று வரை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
பூக்கள் தூவி அஞ்சலி
இன்றைக்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரங்களில் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி இறந்துபோனவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த சோக நிகழ்வில் பங்கேற்று தங்களுடைய ஆறுதலை தெரிவிப்பார்கள்.