2-வது டி20: ஆஸி.க்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2025-10-31 20:21 IST

image courtesy: BCCI

மெல்போர்ன்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹேசில்வுட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “பவர் பிளேயில் அவர் (ஹேசில்வுட் ) பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகள் விழுந்தால், மீண்டு வருவது மிகக்கடினம். அவருக்கு பாராட்டு, அவர் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசினார். அபிஷேக் சர்மா இதை ஏற்கனவே சில காலமாக செய்து வருகிறார்.

தன்னுடைய ஆட்டத்தையும் அடையாளத்தையும் தெரிந்து வைத்துள்ள அவர் எதையும் மாற்றாதது நல்லது. அதுவே அவருக்கு வெற்றியைக் கொடுக்கிறது. இன்னும் பல இதுபோன்ற ஆட்டங்களை எங்களுக்காக ஆடுவார் என்று நம்புகிறேன். முதல் போட்டியில் நாம் செய்ததைத்தான் மீண்டும் செய்ய வேண்டும் - முதலில் பேட்டிங் செய்தால் நிறைய ரன் குவித்து பின்னர் எதிரணியை மடக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்