இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்டின் 3-ம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

கவுகாத்தி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் 2-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7 ரன்), லோகேஷ் ராகுல் (2 ரன்) களத்தில்இருந்தனர். இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிக்கல்டன் - மார்க்ரம் களமிறங்கினர். பும்ரா வீசிய 2-வது இன்னிங்சின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டு ரிக்கல்டன் அதிரடியாக தொடங்கினார்.

தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. மார்க்ரம் 12 ரன்களுடனும், ரிக்கல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ளதால் தற்சமயம் வெற்றி வாய்ப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கே அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com