ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு 65 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.;

Update:2025-12-07 15:19 IST

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெற்றது .இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 334 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 117.3 ஓவர்களில் 511 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் (77 ரன்), ஜேக் வெதரால்ட் (72 ரன்), லபுஸ்சேன் (65 ரன்), அலெக்ஸ் கேரி (63 ரன்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (61 ரன்) ஆகிய 5 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பென் டக்கெட் 15 ரன்னிலும், ஆலி போப் 26 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 44 ரன்னிலும், ஜோ ரூட் 15 ரன்னிலும், ஹாரி புரூக் 15 ரன்னிலும், ஜாமி சுமித் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வில் ஜாக்ஸ் தலா 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நேசர், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 43 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை முன்னிலை பெற வைத்தது. ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணியால் பெரிய அளவில் முன்னிலை பெற முடியவில்லை.

2-வது இன்னிங்சில் 75.2 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 65 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 65 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜேக் வெதரால்ட் 17 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 22 ரன்களிலும், லபுஸ்சேன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்