ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;

Update:2025-12-07 14:30 IST

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 334 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மைக்கேல் நேசர் 16 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்திடம் சிக்கினார். அதிரடியாக ஆடிய அலெக்ஸ் கேரி 63 ரன்னில் (69 பந்து, 6 பவுண்டரி) அட்கின்சன் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்காட் போலன்ட், மிட்செல் ஸ்டார்க்குடன் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்த மிட்செல் ஸ்டார்க் 100 பந்துகளில் தனது 12-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 491 ரன்னாக உயர்ந்தபோது மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னில் (141 பந்து, 13 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் புகுந்த பிரன்டன் டாக்கெட் 13 ரன்னில் அவுட் ஆனார்.

117.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஸ்காட் போலன்ட் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பென் டக்கெட் 15 ரன்னிலும், ஆலி போப் 26 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 44 ரன்னிலும், ஜோ ரூட் 15 ரன்னிலும், ஹாரி புரூக் 15 ரன்னிலும், ஜாமி சுமித் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வில் ஜாக்ஸ் தலா 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நேசர், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 43 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை முன்னிலை பெற வைத்தது. ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணியால் பெரிய அளவில் முன்னிலை பெற முடியவில்லை.

2-வது இன்னிங்சில் 75.2 ஓவர்க விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 65 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 65 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் அடித்துள்ளது. ஹெட் 19 ரன்களுடனும், வெதரால்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 32 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்