ஷிவம் துபேவிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா - பட்லர் அதிருப்தி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவிற்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார்.;

Update:2025-02-01 14:42 IST

புனே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா மற்றும் துபே தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் 3 விக்கெட்டும், ஓவர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே பேட் செய்தபோது, கடைசி ஓவரில் ஜாமி ஓவர்டான் வீசிய ஒரு பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இன்னிங்ஸ் முடிந்ததும் ஷிவம் துபேவை பரிசோதித்தபோது தலைக்குள் லேசாக அதிர்வு இருப்பதாக உணர்ந்தார். இத்தகைய காயத்துக்கு மாற்று வீரரை அனுமதிக்கலாம் என்ற விதிப்படி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஓவர்டான் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் தோல்விக்கு அதை காரணமாக கூற முடியாது என்றாலும் ராணாவின் தேர்வு நியாயமானது அல்ல என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அது சரியான பதில் மாற்று வீரராகத் தெரியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஏனெனில் துபே 25 மைல் வேகத்தில் வீசுபவர் கிடையாது. ராணாவும் பேட்டிங்கில் முன்னேறியவர் கிடையாது. இருப்பினும் அது போட்டியின் ஒரு அங்கமாகும். ஆனால் நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களிடம் அது பற்றி விவாதிக்கப்படவும் இல்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்