சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழற்றி விட்டு விடாதீர்கள் - இந்திய முன்னாள் வீரர்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர்.;

Update:2025-02-15 18:50 IST

image courtesy: PTI

மும்பை,

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். இதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அவரது இடத்தை பிடித்துள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியது.

ஏற்கனவே ஜடேஜா, அக்சர், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 5-வதாக வருண் சக்ரவர்த்தியும் சேர்க்கப்பட்டது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவாக இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்திக்காக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு விடாதீர்கள் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா 5 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளது. துபாயில் சுழலை வைத்து வெல்ல முடியுமா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அங்குள்ள மைதானம் ஸ்பின்னர்களுக்கு எப்போதும் பெரிய உதவிகள் செய்ததில்லை. அது போன்ற சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்திக்காக குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட மாட்டார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். தேவைப்பட்டால் இருவரையும் விளையாட வையுங்கள். ஆனால் குல்தீப் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்