சாம்பியன்ஸ் டிராபி: அறிமுக போட்டியில் 2-வது சிறந்த பந்துவீச்சு.. ஷமியின் சாதனையை தகர்த்த வருண் சக்ரவர்த்தி

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டி வருண் சக்ரவர்த்தியின் முதலாவது சாம்பியன்ஸ் டிராபி ஆட்டம் ஆகும்.;

Update:2025-03-03 07:43 IST

image courtesy:twitter/@BCCI

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று அரங்கேறிய 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், நியூசிலாந்தும் (ஏ பிரிவு) மல்லுகட்டின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேலும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா போராடினார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் மொத்தமான சரணடைந்தது. அந்த அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அறிமுகம் ஆன போட்டியில் 2-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை வருண் சக்ரவர்த்தி (5/42) படைத்துள்ளார். இதற்கு முன்னர் மற்றொரு இந்திய வீரர் முகமது ஷமி (5/53) 2-வது இடத்தில் இருந்தார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (6/52) முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜோஷ் ஹேசில்வுட் - 6 விக்கெட்டுகள் 52 ரன்கள்

2. வருண் சக்ரவர்த்தி - 5 விக்கெட்டுகள் 42 ரன்கள்

3. முகமது ஷமி - 5 விக்கெட்டுகள் 53 ரன்கள் 

Tags:    

மேலும் செய்திகள்