சாம்பியன்ஸ் டிராபி வெற்றி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து பி.சி.சி.ஐ. முக்கிய முடிவு.. வெளியான தகவல்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா, கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பியது காரணமாக அமைந்தது. இதன் காரணமாக பெரும் விமர்சனத்தை சந்தித்த ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் கெரியர் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, "சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கேப்டனாக வென்றுள்ள ரோகித் சர்மாவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொடருக்கு பின்னர் அவர் மற்றும் அணியின் செயல்பாட்டை பொறுத்து கேப்டன்சி மாற்றத்தை பார்க்கலாம் என்றும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com