நான் பவர் ஹிட்டராக மாற தோனி கொடுத்த அட்வைஸ்தான் காரணம் - இலங்கை முன்னாள் வீரர்

ஐ.பி.எல். தொடரில் மகேந்திரசிங் தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.

அவர் கேப்டனாக இருந்த கால கட்டங்களில் பல இளம் வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் வளர்வதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளார்.

இந்நிலையில் தம்மால் அதிரடியாக விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை தோனி கொடுத்ததாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா கூறியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளில் தோனி தலைமையில் அவர் விளையாடியுள்ளார். அப்போது மற்றவர்களைக் காட்டிலும் தோனி தன்னை நம்பி பவர் ஹிட்டிங்கிற்காக ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஒரு தருணம் எனக்கு நினைவிருக்கிறது. அது புனே அணிக்காக விளையாடிய போட்டியாகும். அந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்த சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள்களை எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது. அந்த குழப்பமான நிலையுடன் நான் தடுப்பாட்டத்தை விளையாடினேன்.

அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார். அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள் கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார். தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com