இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்... முதல் நாள் முடிவில் இந்தியா ஏ 409/3

இந்தியா ஏ தரப்பில் கருண் நாயர் 186 ரன்னுடனும், துருவ் ஜுரெல் 82 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.;

Update:2025-05-31 00:30 IST

Image Courtesy: X (Twitter) / File Image

கேன்டர்பரி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜுரெல், ஷர்துல் தாகூர், நிதிஷ்குமார் ரெட்டி போன்ற அனுபவ வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆறு வீரர்களுமே இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருக்க கூடியவர்கள். இவர்களை தவிர சர்பராஸ் கான், அன்சுல் கம்போஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் புகுந்த இந்திய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர்.

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து துருவ் ஜுரெல் களம் இறங்கினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஜுரெல் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 409 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா ஏ தரப்பில் கருண் நாயர் 186 ரன்னுடனும், துருவ் ஜுரெல் 82 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்