எல்லாம் தேர்வுகுழு கையில் இருக்கிறது - மனம் திறந்த ஜெய்ஸ்வால்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.;

Update:2025-12-09 18:07 IST

image courtesy:BCCI

மும்பை,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 271 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 61-வது அரைசதம் அடித்த ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து களம் புகுந்த விராட் கோலி நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

வெறும் 39.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதும், விராட் கோலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சர்வதேச போட்டிகளிலும் சதமடித்த 6-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.

முன்னதாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் காயமடைந்ததால் இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடும் வாய்ப்பை பெற்ற ஜெய்ஸ்வால் முதல் 2 போட்டிகளில் சொதப்பினாலும் கடைசி போட்டியில் சதமடித்து தனது தரத்தை நிரூபித்தார். இதன் காரணமாக அவருக்கு ஒருநாள் போட்டியில் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும் சுப்மன் கில் திரும்பி வரும்போது இவருக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறிதான்.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பெற்றுள்ள ஜெய்ஸ்வால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்பதால் இவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. அப்படி இருந்தும் மனம் தளராமல் தனது செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்திய அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இதனால் அவரை அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெய்ஸ்வால் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே சதம் அடித்துள்ளேன். தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பெறுவது எல்லாமே தேர்வுக்குழு கையில் இருக்கிறது. ஆட்டத்திறன், அணிக்கான தேவை ஆகியவை தொடர்பாக வீரர்கள் தேர்வு இருக்கும். எனக்கான நேரம் எப்போது வரும் என்று தெரியும். அதுவரை எனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்வேன்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்