அதிரடியில் கலக்கிய ஹர்திக்.. தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஹர்திக் பாண்ட்யா வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.;

Update:2025-12-09 20:47 IST

கட்டாக் ,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். இதில் முதல் பந்தை சந்தித்த அபிஷேக் சர்மா சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் பவுண்டரிக்கு ஓட விட்டார். ஆனால் 3-வது பந்தில் சுப்மன் கில் (4 ரன்) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த அபிஷேக் சர்மா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் திலக் வர்மா (26 ரன்கள்), அக்சர் படேல் (23 ரன்கள்) ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடி அணியை மீட்டனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அணியின் ரன் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்திய அவர் கேஷவ் மகராஜின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அதிரடியில் கலக்கிய அவர் வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இவரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்