சென்னை அணியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பயனற்றது - சேவாக் விமர்சனம்

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.;

Update:2025-04-27 08:31 IST

image courtesy:PTI

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது அணியின் நலன் கருதி முன்னணி வீரரான ஜடேஜா 4-வது வரிசையில் களமிறக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்களை வெறும் 123.53 என்ற ஸ்டரைக் ரேட்டில் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா எப்போதும் 120 - 130 என்ற பயனற்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாக சேவாக் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்தத் தொடரின் பாதியிலேயே நான் வர்ணனை செய்வதை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அந்த வழியில் சிந்தனை செய்கிறார்கள். அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் எப்போது வீட்டுக்கு செல்வோம்? என்று காத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் அவர்களில் ஒருவர் பொறுப்பை எடுத்து விளையாடியிருக்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா பயனற்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதற்கு பதில் அவர் 15 - 18வது ஓவர் வரை நிலைத்து விளையாட முயற்சி செய்திருக்க வேண்டும்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்