ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி
இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கை உடன் இன்று மோதியது.;
image courtesy:twitter/@HongKongSixes
ஹாங்காங்,
ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நடந்து வருகிறது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. லீக் சுற்று முடிவில் ‘சி’ பிரிவில் குவைத், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் 2 ஆட்டங்களில் ஆடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்தன. ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முறையே முதல் இரு இடங்களை பிடித்த குவைத், பாகிஸ்தான் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.
3-வது இடம் பெற்ற இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்து ‘பவுல் லீக்’ சுற்றுக்கு தரம் இறங்கியது. பவுல் லீக் சுற்றில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திடமும், 92 ரன் வித்தியாசத்தில் நேபாளத்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை உடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 138 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஹிரு சமரகோன் மற்றும் மதுஷனகா தலா 52 ரன்கள் அடித்தனர்.
இதனையடுத்து 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியால் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சிப்லி 41 ரன்கள் அடித்தார். கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.