இதை வைத்துக்கொண்டு ஐதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியாது - ராயுடு விமர்சனம்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் புள்ளி பட்டியலில் ஐதராபாத் கடைசி இடத்தில் உள்ளது.;

Update:2025-04-07 17:41 IST

image courtesy: PTI

ஐதராபாத்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 31 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் 61 ரன்களுடனும் (43 பந்து, 9 பவுண்டரி), ரூதர்போர்டு 35 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். அத்துடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு ஐதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஐதராபாத் அணியின் தோல்விக்கு பேட்டிங்கை விட பந்துவீச்சுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கவோ, எதிரணியை அழுத்தத்திற்குள் தள்ளவோ அவர்களிடம் யாரும் இல்லை. சாய் கிஷோர், ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகிய குஜராத் பந்துவீச்சாளர்கள் ஐதராபாத் அணியை அழுத்தத்திற்குள் தள்ளினார்கள்.

ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதையே விரும்புவது போல் தெரியவில்லை. அவர்கள் தற்காப்புடன் செயல்பட்டு, பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது போன்ற ஒரு சாதாரணமான மிடில் ஓவர் பவுலிங்கை வைத்துக்கொண்டு உங்களால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாது. உங்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க நல்ல பவுலர்கள் தேவை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்