ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - அசுதோஷ் சர்மா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.;

Update:2025-03-25 14:50 IST

Image Courtesy: @IPL / @DelhiCapitals

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 75 ரன், மிட்செல் மார்ஷ் 72 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் புகுந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அசுதோஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பேட்டி அளித்த அசுதோஷ் சர்மா கூறியதாவது, கடந்த வருடத்திலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். முந்தைய சீசனில் ஓரிரு சந்தர்ப்பங்களில் ஆட்டத்தை முடிக்கத் தவறிவிட்டேன்.

ஆண்டு முழுவதும் நான் அதைப் பற்றி கவனம் செலுத்தியதுடன் இன்று (நேற்று) அதனை செய்தும் காட்டியுள்ளேன். கடைசி ஓவர் வரை விளையாடினால் எதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மேலும் விப்ராஜ் நிகாம் அற்புதாமக விளையாடி எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.

அதனால் நான் அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாட கூறினேன். அழுத்தத்தின் கீழ் அவர் மிகவும் அமைதியாக இருந்தார். மேற்கொண்டு இந்த விருதை எனது வழிகாட்டியான ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்