ஆஸி.கேப்டன் கம்மின்சுக்கு எதிராக செய்த சைகை... வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 44 ரன்களும், ஷாய் ஹோப் 48 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 10 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது கேப்டன் கம்மின்சின் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீழ்த்தினார். விக்கெட் வீழ்த்தியவுடன் கம்மின்சை நோக்கி டிரெஸ்சிங் ரூம் அங்கிருக்கிறது என்ற வகையில் சைகை செய்தார். இதனால் கம்மின்ஸ் அதிருப்தியுடன் சென்றார்.

இது ஐ.சி.சி. விதிமுறைய மீறிய செயலாகும். இது குறித்து ஐ.சி.சி. விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஜெய்டன் சீல்சின் இந்த செயல் ஐ.சி.சி. நடத்தை விதிகளின் பிரிவு 2.5 ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஜெய்டன் சீல்சுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com