ஐ.பி.எல். 2025 இறுதிப்போட்டி; ஆட்டநாயகன் விருதை வென்று வரலாற்று சாதனை படைத்த குருனால் பாண்ட்யா

ஐ.பி.எல். 2025 இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.;

Update:2025-06-04 05:01 IST

Image Courtesy: @IPL

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குருனால் பாண்ட்யா முதல் வீரராக மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, ஐ.பி.எல். வரலாற்றில் (2008 முதல் 2025 வரை) இறுதிப்போட்டியில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை குருனால் பாண்ட்யா (2017 மற்றும் 2025) படைத்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்