ஐ.பி.எல். 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.;

Update:2025-03-03 16:49 IST

Image Courtesy: @KKRiders

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொள்ள உள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இவ்வாறு ஒரு அணி மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு தொடருக்கான புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கே.கே.ஆர் அணியின் ஜெர்சியில், அந்த அணி இதுவரை ஐ.பி.எல் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றதைக் குறிக்கும் வகையில் இலச்சினைக்கு மேல் மூன்று நட்சத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, அனுகுல் ராய், மயங்க் மார்கண்டே மற்றும் லுவ்னித் சிசோடியா ஆகியோர் புதிய ஜெர்சியை அணித்திருக்கும் காணொளியையும் கே.கே.ஆர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜிங்யா ரகானேவும், துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்