ஐபிஎல்: குஜராத் - லக்னோ அணிகள் இன்று மோதல்
முதல் இரு இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி தீவிரமாக உள்ளது.;
ஆமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி பெறும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் முதல் இரு இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி தீவிரமாக உள்ளது. பெங்களூரு, பஞ்சாப் (தலா 17 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்துக்கான ரேசில் நெருக்கமாக இருக்கின்றன.
லக்னோ அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அத்துடன் கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.