ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப்,மும்பை அணிகளுக்கு அபராதம்.. காரணம் என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்றில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியை எட்டும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை அகமதாபாத்தில் நேற்றிரவு எதிர்கொண்டது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 204 இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுககு 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பஞ்சாப் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் அடித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. எனவே ஐ.பி.எல்.விதிமுறையின் படி இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் பஞ்சாப் அணி 2-வது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. எனவே அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (இம்பேக்ட் வீரர் உட்பட) அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் (எது குறைவோ அது எடுத்து கொள்ளப்படும்) விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் மெதுவாக பந்துவீசிய புகாரில் சிக்கியது இது 3-வது முறையாகும். எனவே அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (இம்பேக்ட் வீரர் உட்பட) அனைவருக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் (எது குறைவோ அது எடுத்து கொள்ளப்படும்) விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com