ஐ.பி.எல்.: கடந்த சீசனில் அசத்த முடியாததற்கு காரணம் டி20 உலகக்கோப்பைதான் - ரோகித் சர்மா
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.;
image courtesy:PTI
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதனையடுத்து 2-வது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது.
முன்னதாக கடந்த சீசனில் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிய மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் கவனம் செலுத்தியதால் கடந்த ஐ.பி.எல். சீசனில் (2024-ம் ஆண்டு) சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "2024 எங்களுடைய அணிக்கு சுமாரான தொடராகும். நாங்கள் எங்களுடைய சிறப்பாக விளையாடினோம் என்று நினைக்கவில்லை. அந்த ஐ.பி.எல். தொடருக்குப்பின் டி20 உலகக்கோப்பை வரவிருந்தது. அதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை என்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்தி வெல்ல விரும்பினேன். மும்பை அணியில் விளையாட தொடங்கியது முதல் தற்போது வரை நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
அப்போது மிடில் ஆர்டரில் விளையாடிய நான் தற்போது தொடக்க வீரராக விளையாடுகிறேன். அப்போது கேப்டனாக இருந்த நான் இப்போது கேப்டனாக இல்லை. கோப்பைகளை வென்ற சில வீரர்கள் தற்போது இல்லை. அவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். அப்படி நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் எங்களது மனநிலையில் மாற்றம் இல்லை. இந்த அணிக்காக நான் செய்ய விரும்பும் விஷயங்களில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்த அணிக்காக களத்திற்கு சென்று போட்டிகளையும் கோப்பைகளையும் வெல்ல வேண்டும். அதற்குத்தான் மும்பை பெயர் போன அணியாகும். இத்தனை வருடங்களாக நாங்கள் யாருமே நம்ப முடியாத சூழ்நிலைகளை கடந்து போட்டிகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளோம். எனவே இதுதான் மும்பை. மும்பை என்றால் கோப்பையை வெல்வதற்கான அணி" என்று கூறினார்.