ஐ.பி.எல்.: அதிரடியாக விளையாடுவதை மாற்றமாட்டோம் - ஐதராபாத் பயிற்சியாளர் வெட்டோரி

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத் அணி இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது.
Image Courtesy: @SunRisers
Image Courtesy: @SunRisers
Published on

விசாகப்பட்டினம்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத் அணி இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் போக்கை கடைபிடித்து வரும் அந்த அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்தது.

ஆனால் கடந்த 2 போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது. இந்த நிலையில் அதிரடியாக விளையாடுவதை மாற்றமாட்டோம் என ஐதராபாத் அணி பயிற்சியாளர் வெட்டோரி கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிரடியாக விளையாடும் போக்கை மாற்றுவது பற்றி எந்த உரையாடலும் நடக்கவில்லை. அந்த போக்கை நாங்கள் மாற்ற மாட்டோம். நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம்.

எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நான் நம்புகிறேன். 18 ஐ.பி.எல். சீசன்களின் போக்கைப் பார்த்தால், தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடையாத அணிகள் மிகக் குறைவு. சீசனின் தொடக்கத்தில் ஐதராபாத் இருக்கும் நிலை ஒரு பின்னடைவு அல்ல.

நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறந்த அணி, நன்கு திட்டமிடப்பட்ட அணிகள் மற்றும் மிகவும் திறமையான வீரர்களை எதிர்கொள்கிறோம். நாங்கள் திரும்பி வந்து வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்கள் விரும்பும் பாணியில் தொடர்ந்து விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com