ஜூனியர் கிரிக்கெட்: சூர்யவன்ஷி அதிரடி.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
image courtesy:BCCI
ஹோவ்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹோவ்வில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 174 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராக்கி பிளிண்டாப் 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கனிஷ்க் சவுகான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் மாத்ரே நிதானமாக விளையாட சூர்யவன்ஷி அதிரடியில் பட்டையை கிளப்பினார். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 48 ரன்கள் (19 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இவரது அதிரடி அணியின் வெற்றியை எளிதாக்கியது.
முடிவில் இந்திய அணி வெறும் 24 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.