ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 6 சுற்று: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

இந்திய வீராங்கனை வைஷ்னவி சர்மா இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.;

Update:2025-01-26 22:06 IST

image courtesy:twitter/@BCCIWomen

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ரன் அடிக்க தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சுமையா அக்தர் 21 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வைஷ்னவி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 65 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. வெறும் 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 66 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கங்கோடி திரிஷா 40 ரன்கள் அடித்தார்.

வைஷ்னவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்