லார்ட்ஸ் டெஸ்ட்: மாபெரும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடைபெற்று வருகிறது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

கே.எல்.ராகுல் - ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பாக ஆடியது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட இந்த ஜோடி விரைவில் விக்கெட்டுகளை இழக்க கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியது. இதனால் ரன் வேகம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் அவுட்டானார். தற்போது ஜடேஜா - நிதிஷ் ரெட்டி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் கே.எல். ராகுல் அடித்த 2-வது சதம் இதுவாகும். இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ராகுல் சதமடித்திருந்தார்.

இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட சதங்கள் அடித்த 4-வது வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பில் பிரவுன், வெஸ்ட் இண்டீசின் கோர்டன் கிரீனிட்ஜ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் சுமித் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது கே.எல்.ராகுல் இந்த பட்டியலில் 4-வது வீரராக இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com