தோனியிடம் அப்படி சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 9-வது வரிசையில் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி, 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த வரிசையிலும் அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இருப்பினும் அதிரடி பேட்ஸ்மேனான அவர், இப்படி அஸ்வினுக்கு பின் 9-வது வரிசையில் களமிறங்கியது பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியை முன்வரிசையில் பேட்டிங் செய்ய சொல்லும் தைரியம் சென்னை அணியில் யாரிடமும் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "16 பந்துகளில் 30 ரன்கள் அடித்த தோனி ஏன் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வரவில்லை என்பது எனக்கு புரியவில்லை. மற்ற அனைத்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்களையும் விட அவருக்கு அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. எனவே உங்களால் அதை செய்ய முடியும் என்று தெரிந்தால், நீங்கள் பேட்டிங் செய்து ஆட்டத்தை வெல்ல முயற்சிக்க வேண்டும்.

ஏன் கீழ்வரிசையில் பேட்டிங் செய்கிறீர்கள் என்பது பற்றி மக்களிடம் தோனி வெளிப்படையாக சொல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தோனியை மேல் வரிசையில் பேட்டிங் செய்ய சொல்ல சென்னை அணியில் யாருக்கும் தைரியம் இல்லை. அவர்களால் ஒருபோதும் அவரிடம் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அவர் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், அவ்வளவுதான்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com