'விளக்க ஒன்றுமில்லை....' தோல்வி குறித்து ரஹானே கருத்து

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி கண்டது.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Published on

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் கொல்கத்தா கேப்டன் அஜிங்யா ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது, விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. அங்கே என்ன நடந்தது என்பதை பார்த்தோம். எங்களுடைய முயற்சிகளில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம்.

தவறான ஷாட்டை விளையாடியதற்காக நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ரகுவன்ஷி உறுதியாக தெரியாமல் இருந்தார். எல்.பி.டபிள்யூ விக்கெட் அம்பயர்ஸ் முடிவாக இருக்கலாம் என்று அவர் சொன்னார். அது உறுதியாகத் தெரியாததால் நானும் ரிவ்யூ எடுக்கவில்லை. ரன்ரேட் பற்றி கவலைப்படவில்லை. பேட்டிங் துறையில் நாங்கள் மோசமாக விளையாடியதால் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

பவுலர்கள் இந்த மைதானத்தில் பஞ்சாப்பை 111-க்கு சுருட்டி நன்றாக வேலை செய்தனர். இந்த மைதானத்தில் முழு வேகத்துடன் நீங்கள் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கலாம். ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு கடினமான ஒன்றாக இருந்தது. நாங்கள் கண்மூடித்தனமாக இருந்ததற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இச்சமயத்தில் எனது மனதில் நிறைய விஷயங்கள் செல்கின்றன.

இது எங்களுக்கு எளிமையான சேசிங் வாய்ப்பாக இருந்தது. இருப்பினும் அதை செய்ய தவறி விட்டதால் எனக்கு நானே அமைதியாக இருந்து எங்களுடைய வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கிறேன். இப்போதும் நேர்மறையாக இருக்கிறேன். பாதி தொடர் மீதம் இருப்பதால் எங்களுடைய பின்னடைவுகளை சரி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com