இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தோல்விக்கு இதுதான் காரணம் - இங்கிலாந்து கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் தோல்வியை தழுவியது.;
அகமதாபாத்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் ஆகியது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் தங்களுடைய அணுகுமுறை சரியாக இருந்தும் அதை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே இதே மாதிரியாக சென்றது. நாங்கள் ஒரு அற்புதமான அணியால் தோற்கடிக்கப்பட்டோம். பேட்டிங்கில் எங்களுடைய அணுகுமுறை சரியான ஒன்றாகும். ஆனால் அதை எங்களால் களத்தில் செயல்படுத்த முடியவில்லை.
இந்தியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடித்தனர். சுப்மன் மிகவும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். எங்களுக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் மீண்டும் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தாத கதையே நிகழ்ந்தது. எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். நாங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் வலுவான அணிக்கு எதிராக விளையாடினோம். அது தொடர்ந்து சவாலாகவே இருந்தது" என்று கூறினார்.