அப்போதுதான் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் யார் சிறந்தவர் என்பது தெரியவரும் - பாக்.முன்னாள் வீரர்

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.;

Update:2025-03-03 06:59 IST

image courtesy: PTI

லாகூர்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி துபாய் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றன. இதில் பங்கேற்றிருந்த அணிகள் 2 பிரிவுகளாக (ஏ மற்றும் பி) பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் நடப்பு தொடரில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் பாகிஸ்தானை விட இந்திய அணி சிறந்தது என்று பேச்சுக்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் உண்மையாகவே இந்தியாவிடம் திறமை இருந்தால் தங்களுடன் 30 போட்டிகளில் விளையாட முடியுமா? என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அரசியல் காரணங்களை புறம் தள்ளினால் இந்தியாவின் வீரர்கள் மிகவும் நன்றாக உள்ளனர். அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் உண்மையாகவே நல்ல கிரிக்கெட் அணி என்றால் 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுங்கள். அப்போது யார் சிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிய வரும். நமது பிரச்சினைகளை தீர்த்து சரியான வழியில் சென்று சரியாக தயாரானால் இந்தியாவுக்கும் இந்த உலகுக்கும் பாகிஸ்தான் திடமான பதிலை சொல்ல முடியும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்