இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்: கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக பஞ்சாப் கிங்ஸ் முன்னேறியுள்ளது.;

Update:2025-06-02 16:58 IST

image courtesy:IPL twitter

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியை எட்டும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மழை காரணமாக 2¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுககு 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பஞ்சாப் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் அடித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில், "பேட்டிங் செய்கையில் எப்படி அமைதியாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது போன்ற தருணங்களை நான் விரும்புகிறேன். அழுத்தமான பெரிய தருணங்களில் நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எப்போதும் என்னுடைய சக வீரர்களிடம் தெரிவிப்பேன்.

அதற்கு இந்த போட்டி சிறந்த எடுத்துக்காட்டு. வெளியே இருக்கும் சத்தம் மீது கவனம் செலுத்தாத நான் என்னுடைய முயற்சியில் கவனம் செலுத்தினேன். 200+ ரன்களை துரத்துவதற்கு அனைத்து வீரர்களும் முதல் பந்தில் இருந்தே உறுதியுடன் இருக்க வேண்டும் என்று போட்டியின் ஆரம்பத்திலேயே சொன்னேன். எங்களுடைய தொடக்க வீரர்கள் பெரிய ரன்கள் குவிக்காவிட்டாலும் நல்ல அதிரடியைக் கொடுத்தார்கள்.

நான் கூட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். மறுபுறம் எங்களுடைய பேட்ஸ்மேன் சிறப்பாக அடித்தார்கள். களத்தில் அதிக நேரத்தை செலவிட்டால் எனக்கு சிறந்த தொலைநோக்கு பார்வை கிடைக்கும் என்பது தெரியும். ஆர்சிபி அணியிடம் தோற்ற பின் எதைப் பற்றியும் நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில் இத்தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்களிடம் முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடும் நோக்கம் இருந்ததால் ஒரு தோல்வி எதையும் தீர்மானிக்காது. எங்களுடைய வேலை இன்னும் முடியவில்லை.

இறுதிப்போட்டி குறித்தும் அதிகம் சிந்திக்கவில்லை. இந்த தருணத்தை நான் ரசிக்க விரும்புகிறேன். ஓய்வறைக்கு சென்று இறுதிப்போட்டியை அடைந்துவிட்டோம் என்று என் அணியுடன் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது என்று நான் உணர்கிறேன். எனவே இறுதிப் போட்டியைப் பற்றி அதிகம் சிந்திக்கப் போவதில்லை. நாளைய ஆட்டத்திற்கு முன் சிறந்த மனநிலையில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்