ரஞ்சி டிராபி: சண்டிகருக்கு எதிரான ஆட்டம்... முதல் இன்னிங்சில் தமிழகம் 301 ரன்கள் குவிப்பு

தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-01-24 07:44 IST

Image Courtesy: @TNCACricket

சேலம்,

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் டி-யில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது 6வது லீக் சண்டிகரை எதிர் கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டி சேலத்தில் நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது அலி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் முகமது அலி 40 ரன்னிலும், ஜெகதீசன் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து களம் புகுந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 14 ரன்னிலும், பாபா இந்திரஜித் 49 ரன்னிலும், விஜய் சங்கர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த ஆண்ட்ரே சித்தார்த் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்க்க மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் பூபதி குமார் 9 ரன்னிலும், சாய் கிஷோர் 10 ரன்னிலும், சந்தீப் வாரியர் 1 ரன்னிலும், எம் முகமது ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சித்தார்த் சதம் அடித்து அசத்தினார். அவர் 106 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் முதல் நாள் முடிவில் தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 301 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்கள் எடுத்தார். சண்டிகர் தரப்பில் விஷ்ணு காஷ்யப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்