ஆர்சிபி எனது அணி - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.;
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
ஐ.பி.எல். தொடரின் அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று பல முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இங்கிலாந்து முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் பெங்களூரு அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத் மைதானத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியது பின்வருமாறு:- "நான் பெங்களூரு பெண்ணை திருமணம் செய்துள்ளேன். எனவே ஆர்சிபி எனது அணி" என்று கூறினார்.