ஆர்சிபி வெற்றி விழா கூட்ட நெரிசல்: பெங்களூரு கூடுதல் காவல் ஆணையர் சஸ்பெண்ட் ரத்து

ஆர்சிபி வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.;

Update:2025-07-01 19:21 IST

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அவசரம், அவசரமாக விழாவை நடத்தியதும்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்பேரில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சஸ்பெண் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி விகாஸ் குமார், தன் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விகாஸ் குமார் தெரிவித்திருந்தார்.

எனவே, தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என விகாஸ் குமார் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதன் முடிவில், வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகமே காரணம் என்பதற்கு முதற்கட்ட ஆதாரம் உள்ளது எனக் கூறி, பெங்களூரு கூடுதல் ஆணையர் விகாஸ் குமாரின் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. அத்துடன் அவர் வகித்த பொறுப்பை மீண்டும் வழங்கவும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்